இமைகளில் இருந்து இலைகள்

அந்தப் பறவையை வரையும் போதே
எனக்கு முளைத்த சிறகில் பறந்தது
மரத்தை வரையும் போது
எனக்கு முளைத்த கிளையில் அமர்ந்தது
பின் பெருங்கானகத்தில் இருந்த
கடைசி கனியைத் தேடி
விதையை மீட்டது
இப்போது
இன்னொரு கானகம்
அதன் எச்சத்தில் இடம் பெயருகிறது
இமைகளில் இருந்து
இலைகள் அசைகின்றன
காட்டின் ஒலிக்குறிப்புகள்
என்னிலிருந்து தொடங்குகின்றன
உதிர்ந்த எண்ணங்களில்
உயிர்க்கின்றன விலங்குகள்
அந்தக் காட்டில்
முதல் மனிதனாக உலவுகிறேன்
காதில் செருகிய தூரிகையோடு.

கற்பனை மீது கல்லெறிதல்

புதையல் தேடி புறப்பட்ட மூன்று பேர்
ஒரு புராதன நகரத்தில் துருவேறி அலைகிறார்கள்
அவர்கள்
இனி உங்களுக்கும் பரிட்சயமானவர்கள்
இந்த நாற்காலியில் சற்று அமருங்கள்
கற்பனை வாழ்தலுக்கான கடைசி முயற்சி
தற்கொலை செய்து கொள்ளுமுன்
ஒரு முறையாவது முயன்று பார்க்கலாம்
சுயநலம்
ஒற்றைக் காலிலேயே வேகமாக ஓடக்கூடியது
தன் காலில் ஒன்றையே மிதித்து விட்டு ஓடும்
புதையல் கிடைத்த முதலாமவன்
காதலியைத் தேடி ஓடுகிறான்
பருந்துகளுக்கான விருந்து
இரு மண்டை ஓடுகளில்
ஆசை
நீருக்குள்ளே மூழ்கினாலும்
நிரம்பி விடாத ஓட்டைப் பாத்திரம்
இரண்டாமவனுக்குக் கிடைத்த புதையலை விட
முதலாமவனின் காதலியைத்தான் பிடித்திருக்கு
மூன்றாமவனுக்குப் புதையல்
முதலாமவனின் மண்டையோடு நிறைய
இயலாமை வெளிப்படுத்தும் குரூரம்
முறிவில்லாத விசம் பூசியது
மூன்றாமவனுக்குக் கிடைத்த புதையலை விட
மனைவியின்
புதிய காதலன் யாராக இருக்கும் என்பதே 360°
அதற்கு
எப்படி இரண்டு தலைகள் என பதில் கிடைத்திருக்கும்?
மூவரின் கற்பனை மீதும் கல்லெறிந்தது நீங்கள் தானே
பசித்து அலைந்தவர்கள்
வேடன் இறைத்த தானியங்கள் உண்ண
அதில் நஞ்சு கலந்திருக்கா? இல்லையா?
இதை வாசிக்கும் நீங்களே
இக் கவிதையில் எழுதி விடவும்.

தலையைப் பிரித்தல்

உடலையும் உயிரையும் இரண்டாகப் பிரித்த
பிரசவத்தில் இறந்தவளின் மகனுக்கு
அரைஞாண் கயிறு
உடலை இரண்டாகப் பிரிக்கிறது
சாப்பிடும் போது
தட்டில் இருந்த தலைமுடி
சாப்பாட்டை
உண்டது ~ விடுவது
என இரண்டாகப் பிரிக்கிறது
வகிடு ~ வரப்பு
தலையைப் பிரிக்கிறது
கோபத்தில் ஒரு சொல்
மதமதப்பில் ஒரு வாக்குறுதி
சாதி~மதம்
ஆண் ~பெண்
தவறவிட்ட வண்டி ~ வாய்ப்பு என
அவன் வாழ்வை இரண்டாக பிரித்தவைகள் ஏராளம்
நேற்றும் கூட
மலை உச்சியில் ஏறியவன்
மலையைப் பிரிக்கும்படியாக
இறப்பது எப்படி என யோசித்தான்
அவன் கிழித்த கோடு
புவியை இரண்டாகப் பிரிக்கிறது என நம்பும் அவன்
ஒரு பகுதியை யாருக்கு வழங்குவதென
சிந்தனையில் மூழ்கி இருக்கும் போது
ஒரு குழந்தையின் சிரிப்பு
முகத்தை இரண்டாகப் பிரிப்பதாக பார்க்கும் அவனுடைய
சிந்தனையை மிதிக்கிறது
கோட்டின் மீதான குழந்தையின் கால்கள் .

கிழவி

மேகத்தை ஒட்டடை என அடிக்கிறது
குச்சி போன்று காற்று
எட்டிய தூரம் வரை
இருட்டை இழுத்து நிரம்புகிறது
தெருவிளக்கு

பழுதான பொருள்களோடும்
பழைய சொற்களோடும் வாழும் கிழவி
வெற்றிலை பாக்கு தின்பதை விட்டு
வெகு காலமாகிறது

இப்போதெல்லாம்
தனது பிள்ளைகளையும் மருமகள்களையும்
மென்று கொண்டிருக்கிறாள்
நீங்களும்
ஒரு கிராமத்து இரவுக்குள் நடந்து பாருங்கள்
உங்களையும்
மென்று துப்ப காத்திருப்பாள் ஒரு கிழவி.