குட்டி விண்மீன்

குட்டி விண்மீன்

“எத்தனை நாள்தான் ஒரே இடத்தில் இருப்பது” சலித்துக்கொண்டது கீஉ விண்மீன் . இந்த பிரபஞ்சத்தைச் சுற்றுவதை தவிர வேறு எங்கேனும் போனால் நன்றாக இருக்கும் என்றது ஓயி விண்மீன் . இந்தப் பேச்சைக் கேட்ட எல்லா விண்மீன்களும் மகிழ்ச்சியாக நாங்களும் வருகிறோம் என்று ஒரே குரலில் கூறின. சின்ன விண்மீன்களுக்கு ஒரே மகிழ்சி . அங்கு ஒரு குட்டி விண்மீன் இருந்தது அதன் பெயர் ஊபா . எப்போதும் துருதுரு என இருக்கும் . இந்த குட்டி விண்மீன் வேகவேகமாக எல்லோருக்கும் முன்பாகவே புறப்பட தயாரானது .
 வானம்  ஒரே கோலாகலமாக மாறியது . எல்லா விண்மீன்களும் எங்கோ போகப்போறோம் என்ற ஆவலில் வேகவேகமாக தயாராகின . சின்ன விண்மீன்கள் கும்மாளமிட்டபடி ஓடின . ஊபா குட்டி விண்மீனும் துள்ளிக்கொண்டு தயாரானது. வின்வெளியில் முதன்முறையாக மகிழ்ச்சி பொங்கியது.
  விண்மீன்கள் பயணம் செய்ய ஒளியால்ஆன ஒரு ராக்கெட் வந்தது எல்லா விண்மீன்களும் ஏறின . ஊபா குட்டி விண்மீன் குடுகுடு என ஏறி சன்னலோரம் இடம் பிடித்து அமர்ந்தது ஒளிராக்கெட் புறப்பட்டது . இருநூறு ஒளியாண்டு வேகத்தில் ஒளிராக்கெட் போனது  . புதியதாய் உருவான திரள்வெளி ஊரில் ஒளிராக்கெட்  நின்றது எல்லா விண்மீன்களும் இறங்கி விளையாடின  புதிய ஊரில் கண்டபடி குதித்து திரிந்தன . குறும்புக்கார ஊபா குட்டி விண்மீன் வழி தவறி சென்றது கடைசியில் பூமிக்கு செல்லும் வழியில் நுழைந்து விட்டது. சறுக்கி விளையாடும் போது ஒரு பெரிய பள்ளத்தில் குதித்தது . ஒளிராக்கெட்  புறப்பட தயாரானது. எல்லா விண்மீன்களும் வந்து ஏறிக்கொண்டன ஆனால் ஊபா குட்டி விண்மீனை மட்டும் காணவில்லை எங்கு தேடியும் காணவில்லை . காலா என்ற வயதான விண்மீன் எழுந்து நின்று சொன்னது ” ஒரு விண்மீன் வழிதவறி சென்றுவிட்டால் அது மீண்டும் திரும்பாது இனி ஒளிராக்கெட் புறப்படட்டும் என்றது . சின்ன விண்மீன்கள் வருத்தத்தோடு புறப்பட்டன .
 ஊபா குட்டிவிண்மீன் வேகவேகமாக கீழே இறங்கி வந்தது . ஊரை விட்டு வந்ததால் உருவத்தில் சிறியதாகிக்கொண்டே வந்தது. பல ஒளியாண்டு தூரம் கடந்தது.
 மரத்தடியில் ஒரு சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தாள் அவள் பெயர் ஒளியா . அவளின் காப்பி நிறம் அவ்வளவு அழகு. வீட்டில் ஒரே பொண்ணு   விண்மீன் இப்போது ஒளிரும் ஒரு சிறுகல் போல சிறியதாக மாறிவிட்டது . ஒளியா விளையாடும் இடத்தில் வந்து விழுந்தது. சிறுமி அதை எடுத்துப் பார்த்தாள் ரொம்ப அழகாக இருந்தது. ஏதாவது வாசம் வருகிறதா என  அருகே கொண்டு சென்றாள் திடீரென்று மரத்தில் இருந்த எல்லா புறாக்களும் ஒரே நேரத்தில் பறந்தன  சற்றே பயந்த ஒளியா மூக்கின் மேலே வைத்துவிட்டாள் ஏதோ ஊசி குத்தியது போல ஆ! என கத்தினாள் . உள்ளே இருந்து அம்மா ஓடிவந்தாள் ஒளியாளின் காப்பி நிற முகத்தில் அழகு ஜொலித்தது.
  பார்த்தவர்கள் அதென்ன மூக்கில் குத்தி இருக்கு என்று கேட்டார்கள் அதற்கு என்ன பெயர் சொல்வதென்று தெரியாமல் கடைசியில் மூக்குத்தி என்று சொல்லி பழகிவிட்டார்கள்.
 சின்ன விண்மீன்களின் வருத்தம் தாங்காமல் ஊபா விண்மீன் எங்கேனும் இருக்குமா என தேடி கண்டுபிடிக்க, வயதான  காலா விண்மீன் சில விண்மீன்களை அனுப்பியது . அவை பூமியில் குட்டி விண்மீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தன. ஒளியா வீட்டிற்கே வந்து குட்டி விண்மீனை அழைத்து செல்ல வந்ததாக கூறின. ஒளியாவுக்கு அழுகையாக வந்தது இதைப்பார்த்த விண்மீன்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
 ஒளியாவின் அழுகை விண்மீன்களின் மனசை மாற்றியது. விண்மீகளின் வேண்டுகோளை யாருமே கேட்பதாக இல்லை . கடைசியில் வருத்தத்தோடு விண்மீன்கள் புறப்பட்டன.  இப்போதும் கூட பாருங்க எல்லா சிறுமிகளுக்கும் ஒளியா போலவே மூக்குத்தி  அணிந்து இருக்கின்றனர் . அந்த மூக்குத்திகள் எல்லாமே ஊபா குட்டி விண்மீன் போலவே இருக்கும் .

அஞ்சலி

 

ஸ்டீஃபன் ஹாக்கிங்.
நவீன அறிவியலின் மாபெரும் கொடை.

இவர் 1988 ல் படைத்த

“காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு” எனப்படும்,
“A Brief History of Time” இன்றுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பிரதிகள்
விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

ஐன்ஸ்டைனின் ‘அனைத்திற்கும் உரிய கோட்பாடு’,
“Theory of Everything”, என்பதனை  சமன்பாடாக்கும் முயற்சியினோடு
இறந்துவிட, அதனை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் ஹாக்கிங்.

தனது 21 வது வயதில் ALS எனப்படும் பக்கவாத நோயின்,
( நோயின் விழிப்புணர்வு ஏற்படுத்த ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் ஐஸ் பக்கட் சாதனைக் குளியலில் ‘ஓ’ என்று ஒதுங்கிய, Amyotrophic Lateral Sclerosis – அந்த நோய் ).

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத் தொடங்க,
அவர் இன்னும் இரண்டு வருடங்களில் இறந்துவிடுவார் என மருத்துவ விஞ்சானம் முன்மொழிய, கல்லூரி காலத்திலிருந்து அவரைக்
காதலித்து வந்த ஜேன், Jane Hawking, அன்ற அவர் கரம் பிடித்து மனைவியானார் – (1965 – 1995 ).

முப்பது வருடங்களில் அவர்களுக்கு மணமுறிவு வர, தனது மருத்துவ உதவியாளர் எலைன், Elaine Mason, மனைவியாகச் சம்மதம் தெரிவித்தார். மூன்று குழந்தைகள் – பதினோரு ஆண்டுகளில் அத்திருமணம் முடிவுக்கு வருகிறது 1996 – 2006.

இப்ப தனது 74 வது வயதில்,
அவரது கண், புருவம் மட்டுமே அசைவு தெரிவிக்க மருத்துவ அறிவியலுக்குச் சவால்விட்டு பிரபஞ்ச அறிவியலின் புதிர்களை அவிழ்த்துக் கொண்டிருந்தார் ஹாக்கிங்கின் கண், புருவ அசைவுகள் அவரது சிந்தனைகளால்
எடிட் செய்யப்பட்டு, அவருக்கென்று தயாரிக்கப்பட்ட பிரத்யேகக் கணினி மூலம்
ஒலி வடிவங்களாக வெளிக் கொணரப்பட்டு பிரபஞ்ச விஞ்சானம் மேலும் வெளிச்சம் பெற்றுக் கொண்டிருந்தது

கடந்த ஆண்டு, டிசம்பர் 2014 ல் பி.பி.சி க்குப் பேட்டி கொடுக்கையில், “தற்கொலைக்கு, Assisted suicide, அனுமதி வழங்கலாம்”

என்ற உடன் உலகமே அதிர்ந்து போனது.

” எனது குழந்தைகள், லூசி, டிமோதி, ராபட், சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடன் விளையாட எண்ணுகையில், எனது சிறுவயதுக் குறும்புகள் ஞாபகப் படுத்துகின்றன.

என்னை நேசிப்பவர்களுடன் எனது எண்ணப்பகிர்வு இல்லாமல் – எனது இயலாத நிலையே அவர்கள் என்னைப் புறக்கணிப்பது – அச்சப்படுவது – என்னை மேலும் மேலும் துன்புறுத்துகிறது.

அடுத்தவருக்குப் பாரமாக இல்லாமல் அவர்கள் உதவியுடன் என்னை உலகத்திலிருந்து விலக்கிக்கொள்ள விரும்புகின்றேன்”.
விலகிக்கொண்டார் – இன்று – தனது 76 வயதில்.

அவருக்கிருந்ததுபோல் நோயுள்ளவர்கள்,
MND ie ALS, or Lou Getrig’s உள்ளவர்கள் பத்து வருடங்களுக்கு மேல்
உயிரோடு இருந்த்தில்லை என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

விஞ்ஞான வெளிச்சம் பாய்ச்சுவதில் ஹாக்கிங்
தனது சாதனைகளை இன்றுடன் நிறுத்திக் கொண்டார்.

அவருக்கு என் இதய பூர்வமான அஞ்சலி |

இமைகளில் இருந்து இலைகள்

அந்தப் பறவையை வரையும் போதே
எனக்கு முளைத்த சிறகில் பறந்தது
மரத்தை வரையும் போது
எனக்கு முளைத்த கிளையில் அமர்ந்தது
பின் பெருங்கானகத்தில் இருந்த
கடைசி கனியைத் தேடி
விதையை மீட்டது
இப்போது
இன்னொரு கானகம்
அதன் எச்சத்தில் இடம் பெயருகிறது
இமைகளில் இருந்து
இலைகள் அசைகின்றன
காட்டின் ஒலிக்குறிப்புகள்
என்னிலிருந்து தொடங்குகின்றன
உதிர்ந்த எண்ணங்களில்
உயிர்க்கின்றன விலங்குகள்
அந்தக் காட்டில்
முதல் மனிதனாக உலவுகிறேன்
காதில் செருகிய தூரிகையோடு.

கற்பனை மீது கல்லெறிதல்

புதையல் தேடி புறப்பட்ட மூன்று பேர்
ஒரு புராதன நகரத்தில் துருவேறி அலைகிறார்கள்
அவர்கள்
இனி உங்களுக்கும் பரிட்சயமானவர்கள்
இந்த நாற்காலியில் சற்று அமருங்கள்
கற்பனை வாழ்தலுக்கான கடைசி முயற்சி
தற்கொலை செய்து கொள்ளுமுன்
ஒரு முறையாவது முயன்று பார்க்கலாம்
சுயநலம்
ஒற்றைக் காலிலேயே வேகமாக ஓடக்கூடியது
தன் காலில் ஒன்றையே மிதித்து விட்டு ஓடும்
புதையல் கிடைத்த முதலாமவன்
காதலியைத் தேடி ஓடுகிறான்
பருந்துகளுக்கான விருந்து
இரு மண்டை ஓடுகளில்
ஆசை
நீருக்குள்ளே மூழ்கினாலும்
நிரம்பி விடாத ஓட்டைப் பாத்திரம்
இரண்டாமவனுக்குக் கிடைத்த புதையலை விட
முதலாமவனின் காதலியைத்தான் பிடித்திருக்கு
மூன்றாமவனுக்குப் புதையல்
முதலாமவனின் மண்டையோடு நிறைய
இயலாமை வெளிப்படுத்தும் குரூரம்
முறிவில்லாத விசம் பூசியது
மூன்றாமவனுக்குக் கிடைத்த புதையலை விட
மனைவியின்
புதிய காதலன் யாராக இருக்கும் என்பதே 360°
அதற்கு
எப்படி இரண்டு தலைகள் என பதில் கிடைத்திருக்கும்?
மூவரின் கற்பனை மீதும் கல்லெறிந்தது நீங்கள் தானே
பசித்து அலைந்தவர்கள்
வேடன் இறைத்த தானியங்கள் உண்ண
அதில் நஞ்சு கலந்திருக்கா? இல்லையா?
இதை வாசிக்கும் நீங்களே
இக் கவிதையில் எழுதி விடவும்.

தலையைப் பிரித்தல்

உடலையும் உயிரையும் இரண்டாகப் பிரித்த
பிரசவத்தில் இறந்தவளின் மகனுக்கு
அரைஞாண் கயிறு
உடலை இரண்டாகப் பிரிக்கிறது
சாப்பிடும் போது
தட்டில் இருந்த தலைமுடி
சாப்பாட்டை
உண்டது ~ விடுவது
என இரண்டாகப் பிரிக்கிறது
வகிடு ~ வரப்பு
தலையைப் பிரிக்கிறது
கோபத்தில் ஒரு சொல்
மதமதப்பில் ஒரு வாக்குறுதி
சாதி~மதம்
ஆண் ~பெண்
தவறவிட்ட வண்டி ~ வாய்ப்பு என
அவன் வாழ்வை இரண்டாக பிரித்தவைகள் ஏராளம்
நேற்றும் கூட
மலை உச்சியில் ஏறியவன்
மலையைப் பிரிக்கும்படியாக
இறப்பது எப்படி என யோசித்தான்
அவன் கிழித்த கோடு
புவியை இரண்டாகப் பிரிக்கிறது என நம்பும் அவன்
ஒரு பகுதியை யாருக்கு வழங்குவதென
சிந்தனையில் மூழ்கி இருக்கும் போது
ஒரு குழந்தையின் சிரிப்பு
முகத்தை இரண்டாகப் பிரிப்பதாக பார்க்கும் அவனுடைய
சிந்தனையை மிதிக்கிறது
கோட்டின் மீதான குழந்தையின் கால்கள் .

கிழவி

மேகத்தை ஒட்டடை என அடிக்கிறது
குச்சி போன்று காற்று
எட்டிய தூரம் வரை
இருட்டை இழுத்து நிரம்புகிறது
தெருவிளக்கு

பழுதான பொருள்களோடும்
பழைய சொற்களோடும் வாழும் கிழவி
வெற்றிலை பாக்கு தின்பதை விட்டு
வெகு காலமாகிறது

இப்போதெல்லாம்
தனது பிள்ளைகளையும் மருமகள்களையும்
மென்று கொண்டிருக்கிறாள்
நீங்களும்
ஒரு கிராமத்து இரவுக்குள் நடந்து பாருங்கள்
உங்களையும்
மென்று துப்ப காத்திருப்பாள் ஒரு கிழவி.

எறும்புகள் என்ன சொல்லுகின்றன ?

இரயிலில் பாய்ந்து

தற்கொலை செய்தவளின்

உடலை சேகரித்துக் கட்டுபவனுக்கு

முடிச்சு போடுவது தான் இலக்கு

 

தானியங்களோ

புழுக்களோ கிடைக்காத காகம்

லிப்ஸ்டிக் பூசிய உதட்டை

வாசனையான புழுவென கொத்துகிறது

நுண் வேலைப்பாடு தோடு உடைய

அறுந்த ஒற்றைைக் காது மடலில்

எறும்புகள் கூட்டமாக என்ன சொல்லுகின்றன ?

செய்திகள் மறைந்த நாளில்

பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும்

பேரிளம் பெண்ணின் பெயராகவும் இருக்கலாம்

நான்காவது தூண்கள்

 

பிரதமர்

முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என

காத்திருந்தன ஊடகங்கள் 

பல முறை

புதிய இந்தியா பிறந்ததை அறிவித்தவர் ஆயிற்றே

அறிவிப்பு எத்தனை எளிய மனிதர்களுக்கான 

மரண சாசனமாக இருக்குமோ என அஞ்சினேன்

 

பிரதமர்

வெளியே வந்த போது

நல்ல மழை பெய்தது

சகுனம் சரியில்லை என 

அறிவிப்பு ஏதுன்றி திரும்பி போய்விட்டார் 

 

பரபரப்பாக

ஊடகங்கள் தலைப்பு செய்தி வெளியிட்டன 

 

மழையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் .